தமிழ்10

Monday, July 6, 2009

லா.ச.ரா.


சமிபமாகவே இலக்கிய தேடல் வேர் விட்டு கொண்டிருக்கிறது . காரணம் இன்னதென்று தெரியவில்லை . நண்பனின் ஆலோசனையின் பேரில் புத்தக கண்காட்சி ஒன்றில் லா.ச.ரா.வின் அபிதாவை வாங்கலானேன் . சரியாக நாற்பது வருடங்களுக்கு முந்தைய நாவல் .

நாவலின் போக்கில் காதல்,காமம் , கடவுள் என அனைத்தையும் கடந்து விட முடிகிற அவரின் எழுத்தின் ஆளுமை ஆச்சரியத்திற்குரியது . இது எனக்கு முதல் முறை என்பதால்தான் இந்த ஆச்சரியம். லா.ச.ரா .வின் மற்ற பல நாவல்களை வாசித்தவர்கள் ஆச்சரியத்திற்கு அப்பாற்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன் .


தனியொரு மனிதனின் காதல்,காம , பக்தி உணர்வுகளை உணர்ச்சியின் குவியலாய் குவிப்பது இந்த நாவல் . வாசிப்போர் யாவரும் நாவலின் மையப் பாத்திரமாகிவிடுவதே லா.ச.ரா எழுத்தின் சிறப்பு . உதாரணமாக நாவலின் மைய பாத்திரமொன்றிற்கு பெயரே கிடையாது . பெயரற்ற அந்த பாத்திரத்தின் வழியே தான் நாவலானது பயணிக்கிறது . பெயர் என்ன என்பது குறித்து நீங்கள் வாசிக்கும்போது எங்கும் யோசிக்க எத்தனிக்க முடியாது . ஏற்கனவே குறிப்பிட்டபடி நீங்களே பாத்திரமாகிவிட்டபின் , உங்கள் வழியே உங்களை பற்றி நீங்களே கூறுகையில் உங்கள் பெயர் பற்றி யோசிப்பிர்களா என்ன ?


ஆனால் இந்த நாவலின் பாத்திரங்கள் வாழும் வாழ்க்கை ,அவர்களின் உணர்ச்சிகள் யாவும் சராசரி மனிதன் அனுபவிக்காத ஒன்றே என தோன்றுகிறது .நூல் பழையதாயினும் இந்த வாசிப்பின் அனுபவம் மிகப்பெரும் பரவசம் .முடிந்தால் நீங்களும் பரவசப்படுங்கள் .

கிழக்கு பதிப்பகம் வெளியீடு .

பி .கு . இது என்னை போன்ற ஆரம்பநிலை ஆர்வலர்களுக்கு மட்டும் . மேதைகள் புறக்கணிக்கவும்

Monday, June 22, 2009

மின்னஞ்சலில் வரப்பெற்ற குட்டி கதை

கவுண்டமணியும், வில்லு பட விஜயும்
கவுண்டமணி: ச்சே.. போன எடுத்தா நச்சு நச்சுன்னுராங்கப்பா.. ஏதோ வில்லுன்னு விஜய் படமாம்.. அத விஜய் ரசிகங்களாலேயே பார்க்க முடியலையாம்.. என்ன பாக்க சொல்றாங்க.. அட இது பரவா இல்ல.. சோசியல் மேட்டர், பண்ணிக்கலாம்.. ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் என்ன ஆட சொல்றாங்கப்பா.. நான் என்ன விஜய் மாதிரி ஆடுகாலியா இல்ல பரதேசியா? ஒரே குஷ்டமப்பா.. ச்சீ.... கஷ்டமப்பா..
விஜய்: ங்கண்ணா.. போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆகுதுங்கன்னா..
கவுண்டமணி: ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாரு அவன சொல்லணும்..
விஜய்: போங்கண்ணா.. உங்களுக்கு ஒரே குறும்பு.. கம்பெனி சீக்ரட் எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு.. சரி சரி.. இப்போ நம்ம பாட்ட கேளுங்க..
"ஹே ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டேன்
பீமா பீமா பீமன்கிட்ட கதைய கேட்டேன்
முருகு முருகு முருகன்கிட்ட மயில கேட்டேன்..
ஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலைய கேட்டேன்"
கவுண்டமணி:நிறுத்துடா ஆப்பிரிக்கா வாயா.. இவ்வளவு கேட்டியே.. பிரபுதேவாகிட்ட கதை என்னன்னு கேட்டியா?
விஜய்:??!!!

Sunday, June 21, 2009

அப்பாவுக்கு...

அப்பாவுக்கு அன்பு மகனின் பதிவு . வாழ்க்கையில் அனைத்தையும் தாமதமாய் பெற்றவர் நீங்கள் . மனைவியிலிருந்து அன்பு மகன் நான் உட்பட .அதனாலேயே என்னவோ தங்களை பற்றி எல்லாமே நான் தாமதமாகவே அறிகிறேன் . மூன்று நாளுக்கு முந்தைய உங்களின் பிறந்த நாளைக்கூட .'வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ' என்பது மாதிரியான அரசியல் வாசகத்தை உங்கள் முன் வைக்க விரும்பவில்லை . நீங்கள் வாழ்த்தவும் முடியாத வணங்கவும் முடியாத இடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன் .
ஒரு தகப்பனாக என்னை தாங்கள் கண்டித்ததும் இல்லை , தோழனாக தோள் கொடுத்ததும் இல்லை . என் குறித்த உங்களது விமர்சனங்களை அம்மா வழியாகவே அறிந்தேன் . அதன் பொருட்டே உங்களை சராசரி அப்பாவின் இடத்தில் என்னால் இருத்த முடியவில்லை . அதே நேரம் உங்கள் கருத்துகளுடன் ஒருமித்து போகவும் முடியவில்லை . நீங்கள் சராசரி அப்பா இல்லைதான் , அதற்காக உங்கள் கனவை நான் காண முடியாது . உங்கள் வழியில் நான் பயணப்படவும் முடியாது . என்னுடைய இந்த கருத்திற்கு தாங்கள் என்னை மன்னிக்கத்தான் வேண்டும் .
இதை நான் உங்களிடம் நான் நேரில் கூறப் போவதுமில்லை , நீங்களும் இந்த பதிவை படித்து என்னிடம் வாதம் புரியப் போவதுமில்லை . ஒரு மகனாக உங்களிடம் கூற முடியாததை இங்கு பதிந்ததில் ஒரு சின்ன ஆசுவாசம் . ஒன்று மட்டும் உறுதி நான் என்றுமே உங்களுக்கு சராசரி மகனாக இருக்க மாட்டேன் .
தாமதிக்கப்பட்ட பிறந்த நாள் வாழ்த்துகள்
இப்படிக்கு
பாலா

Tuesday, June 16, 2009

நாட்டாமை


இந்த படத்தை கொஞ்சம் நல்லா உத்து பாருங்க. அமெரிக்க தொழிலாளியை கவுரவ படுத்த சிலை வைக்கப்படுகிறது . அதனடியில் made in china என பொறிக்கப்பட்டுள்ளது . உலகின் முதன்மை நாட்டாமையான அமெரிக்காவிலும் சீனா தனது கடையை விரித்துவிட்டது .செல்போன் முதல் மருந்து மாத்திரை வரை சகாய விலையில் வழங்க சீனா தயாராகி விட்டது . இன்னும் சில வருடங்களில் தீபாவளிக்கு இனிப்பும் உழவர் நாளுக்கு பொங்கலும் கூட சீனாவிலிருந்து இறக்குமதி ஆகலாம் .இந்த மார்க்கெட் தந்திரத்தின் பின்னணி என்ன ? இங்கிலாந்துடன் நட்பு பராட்டி கவிழ்த்து அவர்களது நாற்காலிக்கு வந்த அமெரிக்காவின் தந்திரம் தான் . உலகின் ஒட்டு மொத்த நாடுகளிலும் கடை விரித்து அதை ஆலதொடங்கும் எண்ணம்தான் .

இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்ததன் பின்னணியில் இந்த தந்திரம் உள்ளது . முதலில் ராணுவ தளவாடங்களை விற்கலாம். நல்ல லாபம் கிடைக்கும் . போருக்கு பிறகு உருக்குலைந்தும் கிடக்கும் நகரத்தை சீனாவின் trade mark சகாய விலையில் சீர் செய்யலாம் . அப்படியே இலங்கையுடன் நட்பு செய்யலாம் . இந்தியாவை கண்காணிக்கலாம் . ஆசியா மட்டுமின்றி உலகின் நாட்டாமை ஆகிவிடலாம் என்கிற நினைப்புதான் சீனாவுக்கு . நினைப்பு பொழப்பை கெடுக்கும் மாப்ளேய் .

Saturday, May 23, 2009

நடந்தது என்ன?


கடந்த நான்கு நாட்களாக மண்டை குழப்பும் செய்தி இது . பிரபாகரன் உள்ளாரா அல்லது மாண்டரா? இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் என்பது பதிலாக இருக்கலாம் .பிரபாகரன் தவிர்க்கமுடியாத சூழலில் தனது முக்கியமான பிற தலைவர்களுடன் சிற்றூந்தில் தப்பிக்க முயலும்போது ஏவுகனை வீசி கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் முதலில் அறிவித்தது .ஆனால் அவரது பிரேதத்தில் தீக்காயம் ஏதுமின்றி நெற்றிபொட்டில் குண்டடி காயம் மட்டும் இருந்தது . பின்பு போர்க்களத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவித்தது .ஏன் அவரது மரணத்தில் இத்தனை முரண்பட்ட தகவல் . எந்த ஒரு அவசர நிலையிலும் இயக்கத்தின் தலைவர்கள் ஓரிடத்தில் கூடவோ ஒன்றாய் தப்பிக்கவோ மாட்டர்கள் என்கிறார் எனது ஆசான் . இலங்கை அரசோ அனைவரும் ஓரிடத்தில் கொல்லப்பட்டதாக கூறுகிறது . புலிகளின் ஆதரவாளர்கள் பிரபாகரன் நலமுடன் உள்ளார் .இயக்கத்தை தொடர்ந்து வழி நடத்துவார் என்கின்றனர் .உண்மையை யாரும் யூகிக்க முடியாது . ஏனென்றால் போற்பகுதிக்கு எந்த ஒரு பத்திரிகையாளரும் அனுமதிக்கப்படவில்லை.இலங்கை அரசு தருவதுதான் தகவல் .புலிகளோ பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான சாட்சியங்களை காட்டவில்லை.அனைத்து தமிழ் நாளேடுகளும் இந்த இரண்டு செய்தியையும் மாற்றி மாற்றி பிரசுரிக்கின்றதே தவிர உறுப்பு இழந்து தவிக்கும் தமிழ் மக்களின் நிலையை ஏறக்குறைய மறந்து விட்டது .தனக்கு சாதகமாய் செய்தி வெளியிடுவதால் இரு தரப்புமே புத்திசாளியகிவிடுகிறது. உண்மை தேடும் நானும் என்னை போன்ற பிற தமிழனுமே முட்டளாகின்றோம்

இவன்தான் பாலா

அடியேன் பாலா .பாலமுருகன் .பதிவுதளங்களின்பால் கொண்ட ஆர்வத்தால் எழுத துணிந்துள்ளேன். தமிழ் உலகிற்கு இவன் என்ன பெரிதாய் எழுதிவிட போகிறான் என்று நீங்கள் உங்கள் அருகிருக்கும் நண்பரின் காதில் கிசுகிசுக்கலாம்.பெரிதாய் இல்லை என்றாலும் நற்றமிழில் பார்த்ததையும் பழகியதையும் பாதித்ததையும் பதியவே விரும்புகிறேன் .என் பதிவுகளின்பால் ஏற்படும் உங்கள் உணர்ச்சிகள் அனைத்தையும் எழுத்துரு கொடுத்து எனக்கே திருப்பி விடுங்கள் .அது உங்கள் வசவோ வாழ்த்தோ எதுவாயினும் . பிழையெதுவும் கண்டால் சுட்டிக்காட்டி குட்டி விடுங்கள்.பெற்றுகொள்வேன்.
இப்படிக்கு
பாலா